Written on 05.05.2015
இன்றும் சரி, நாளையும் சரி, அனுஷம். இரட்டிப்புக் கொண்டாட்டம். இரண்டு நாளுமே, பெரியவா பூஜைகள். ஊர்வலங்கள்.
பெரிய அனுக்ரஹம்தான்!
நாளை, Bangalore JP Nagar ல், ஒரு அடியாரின் இல்லத்தில், பெரியவாளின் பாதுககளுக்குப் பூஜை.
அந்தப் பாதுகைகள்தான் என்ன தவம் செய்தவை! பெரியவாள் பாதத்தை அனுதினமும் தாங்கிச் சுற்றியவை. மும்முறை, பெரியவாளின் பாதத்தைத் தாங்கிக்கொண்டு, பாரதம் முழுக்க வலம் வந்தவை. இந்த பாரத பூமி முழுக்க இருக்கும் அடியார்கள் அனைவருக்கும் பெரியவாளின் தரிசனம் கிடைக்கக் காரணமாய் இருந்தவை.
இப்படி சிந்தனை செல்லும்போது, பெரியவாள் ஏன் இந்த பாரதத்தை மும்முறை வலம்வர வேண்டும் என்று உள்ளே ஒரு கேள்வி எழுகிறது.
முதல் முறை, 20 வருட யாத்திரை. இரண்டாவது முறை, ஆந்திராவில் யாத்திரை. மூன்றாவது முறை, தனது 80 ஆவது வயதில், 6 வருடம், ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்டிராவெல்லாம் சுற்றிவிட்டுத் திரும்பிய யாத்திரை.
ஒரு நாளைக்கு 12 km எனத் தனது 80 ஆவது வயதில் ஏனிப்படி பெரியவாள் நடக்க வேண்டும்?
எல்லாம் நமக்காகத்தான்.
உற்சவ மூர்த்தி, புறப்பாடு ஆகி, தனது கோவிலுக்கு வர முடியாதவருக்கும் தரிசனம் தருவது போல, எங்கெங்கோ இருப்பவருக்கும் நடையாய் நடந்து தரிசனம்!
இப்படி, பெரியவாளின் நடையையும், பக்தர்களுக்காக அந்த தெய்வம் தனது உடல் வருத்தம் ஏதும் பாராமல் நடந்து சென்றது பற்றியும் சிந்தனை செய்யும்போது, சற்றே வேடிக்கையாக ஒன்று தோன்றியது.
அத்தனை தெய்வங்களும் "நாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுகிறோம், நீயே எங்களுக்கெல்லாம் சேர்த்து சுற்றிவிட்டு வா" என்று சொல்லியிருக்குமோ?
இந்த பாரத தேசம் முழுக்க இருக்கும் அத்தனை தெய்வங்களுக்கும் சேர்த்தே பெரியவா நடந்து சென்றார்களோ என்று தோன்றியது! அத்தனை தெய்வங்களும் குடியிருக்கும் மூர்த்தி அன்றோ நம் பெரியவா!
பெரியவா தரிசனம் தந்தால், அத்தனை தெய்வங்களும் தரிசனம் தந்தார்போல்தானே!
இந்த, சற்றே வேடிக்கையான சிந்தனையை வெளிப்படுத்துவது போல, பெரியவா மேல், ஒரு சிறிய பாமாலை.
பெரியவா சரணம்.
____________________________________________________
____________________________________________________
எத்தனை தெய்வம் உண்டு பாரத பூமி தன்னில்!
அத்தனை தெய்வங்களும் இருந்தே இளைப்பாற, ஏன்
நடையாய் நடந்து இங்கே, மும்முறை சுற்றி வந்தீர்?
பாரத பூமி காக்க, மொத்தமாய் பாடுபட்டீர்?
அத்தனை தெய்வங்களும் இருந்தே இளைப்பாற, ஏன்
நடையாய் நடந்து இங்கே, மும்முறை சுற்றி வந்தீர்?
பாரத பூமி காக்க, மொத்தமாய் பாடுபட்டீர்?
கணபதிக் கந்தனும், மாயனும் சிவனும்
கூத்தனும், சக்தியும், திருவும், வாணியும்
அத்தனை தெய்வம் இருக்க, பாரத பூமி முற்றும்,
எங்களைக் காக்கவென்று ஏன் ஐயனே சுற்றி வந்தீர்?
கூத்தனும், சக்தியும், திருவும், வாணியும்
அத்தனை தெய்வம் இருக்க, பாரத பூமி முற்றும்,
எங்களைக் காக்கவென்று ஏன் ஐயனே சுற்றி வந்தீர்?
இன்னலை நீக்கவென்றே, ப்ரணவனாய் வந்த பிள்ளை
மோதகம் உண்டு சற்றே, ஓய்வாய் இருந்ததாலோ?
மோதகம் உண்டு சற்றே, ஓய்வாய் இருந்ததாலோ?
அடியார்கள் வாழ என்றே, அறுமுகம் கொண்ட பிள்ளை
பழம் வேண்டி கோபம் கொண்டு, பழனிக்குச் சென்றதாலோ?
பழம் வேண்டி கோபம் கொண்டு, பழனிக்குச் சென்றதாலோ?
உலகத்தைக் காக்கவென்றே, அவதாரம் செய்த அந்த
கண்ணனாம் மாயன் இங்கே, பாற்கடல் படுத்ததாலோ?
கண்ணனாம் மாயன் இங்கே, பாற்கடல் படுத்ததாலோ?
தீமைகள் அழிந்து என்றும், மங்கலம் பொங்க வந்த
சிவனுமே சிவனேயென்று, சுடலையில் இருந்ததாலோ?
சிவனுமே சிவனேயென்று, சுடலையில் இருந்ததாலோ?
ஆனந்தமாக இந்த, அவனியை வாழச் செய்யும்
தில்லையின் ராஜன் கூத்தில், தன்னையே மறந்ததாலோ?
தில்லையின் ராஜன் கூத்தில், தன்னையே மறந்ததாலோ?
திருவருள் பெருகி எங்கும், குறையெலாம் நீங்கச் செய்யும்
திருவுமே, காந்தன் நெஞ்சில், குடி கொண்டு விட்டதாலோ?
திருவுமே, காந்தன் நெஞ்சில், குடி கொண்டு விட்டதாலோ?
கல்வியே சிறந்து எங்கும், ஞானமே வளர்க்கும் செல்வி
கோவிலே இல்லை என்று, கோபமாய்ச் சென்றதாலோ?
கோவிலே இல்லை என்று, கோபமாய்ச் சென்றதாலோ?
எத்தனை தெய்வம் உண்டு பாரத பூமி தன்னில்!
அத்தனை தெய்வங்களும் இருந்தே இளைப்பாற, ஏன்
நடையாய் நடந்து இங்கே, மும்முறை சுற்றி வந்தீர்?
பாரத பூமி காக்க, மொத்தமாய் பாடுபட்டீர்?
அத்தனை தெய்வங்களும் இருந்தே இளைப்பாற, ஏன்
நடையாய் நடந்து இங்கே, மும்முறை சுற்றி வந்தீர்?
பாரத பூமி காக்க, மொத்தமாய் பாடுபட்டீர்?
No comments:
Post a Comment