எனது பெரியப்பா ஸ்ரீமான் (லேட்) சுந்தரேஸ்வர ஐயர், பிக்ஷாண்டார் கோவில், என்னிடம் நீண்ட நாள் முன்பு பகிர்ந்து கொண்ட செய்தி ஒன்றை இந்தக் குழுமத்தில், பெரியவா பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அடியேனுடைய பெரியப்பா தற்போது பூதவுடலுடன் இல்லை. அப்படிப்பட்ட சமயத்தில் அவர் சொன்ன நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாமா என்றும் ஒரு சந்தேகம் என்னுள் எழுகிறது (நான் ஏதேனும் தவறாகச் சொல்லிவிடக்கூடாது இல்லையா - சுட்டிக் காட்ட, சரி செய்ய, அவர் இல்லையே). ஆனாலும், தவறு ஏதும் இல்லமல் இதனை சரியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஸ்ரீசரணர் அருளட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
எனது பெரியப்பா (ஸ்ரீமான் (லேட்) சுந்தரேஸ்வர ஐயர், பிக்ஷாண்டார் கோவில்), ஒரு முறை, திருவண்ணாமலை சென்று, ஸ்வாமி தரிசனம் செய்து, பின்னர் ஸ்ரீ ரமண மஹரிஷியை தரிசிக்கச் சென்றார். அப்பொது 1940 -1945 ஆக இருக்கலாம். மஹரிஷியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும், முதல் முறை தரிசனம். எல்லோருடனும் சேர்ந்து மஹரிஷி சாப்பிடுவதை, அதிலும் இட்லி சாப்பிடுவதை பார்த்து அதிசயித்தார்.
பின்னர், ரமண மஹரிஷி தரிசனம் கொடுக்க ஹாலுக்கு வந்த போது, எல்லோருடனும் சேர்ந்து, எனது பெரியப்பாவும் ஹாலுக்கு வந்து, அனைவருடனும் அமர்ந்து கொண்டார். அப்போது அவருக்கு ஒரு அதிசய அனுபவம் ஏற்பட்டது. மஹரிஷிகளின் கண்கள், எனது பெரியப்பாவின் கண்களை ஒரு முறை நோக்கின. அவ்வளவுதான். எனது பெரியப்பா, உடல் லேசாக ஆனது போல் உணர்ந்தார். மிக ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தார். தன் நினைவு இழந்தார். ஒரு கட்டத்தில், மஹரிஷிகள் தனது அருட்பார்வையை எனது பெரியப்பாவின் கண்களிலிருந்து விலக்க, தனது சுய நினைவைப் பெற்றார். எத்தனை நேரம் இது போன்று இருந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. இது என்ன அனுபவம் என்றும் அவருக்குப் புரியவில்லை. யாரிடம் கேட்பது? பெரியவாளிடம் சென்று கேட்கலாம் என்று தீர்மானித்தார்.
பெரியவாளை (எந்த இடத்தில் பெரியவாளைப் பார்த்தார் என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை) சென்று தரிசனம் செய்துகொண்டார். பெரியவா சற்றே ஓய்வாக இருந்தபோது, அருகில் சென்று பணிந்தார். தன் தாத்தா பெயர் (நாராயண ஐயர்), அப்பா பெயர் (கணபதி ஐயர்), அம்மா பெயர் (ஈஸ்வரி), தனது மாமா தாத்தா பெயர் (பைங்கானாடு பஞ்சாபகேச ஐயர் - பெரியவாளின் ரிக் வேத குரு), பிறகு கடைசியில் தனது பெயர் - எல்லாம் சொல்லி வந்தனம் செய்து கொண்டார். பின்னர், தன் அனுபவம் பற்றிப் ப்ரஸ்தாபித்தார்.
"சமீபமா, திருவண்ணாமலைக்குப் போயிருந்தேன்"
பெரியவாளின் முகத்தில் புன்னகை. "பெரியவாளைப் பார்த்தியோ?"
நாம் எல்லொரும் 'பெரியவா' எனக் கொண்டாடும் அந்த தெய்வம் 'பெரியவாளைப் பார்த்தியோ' என்று ரமண மஹரிஷிகளைப் பற்றிக் கேட்டது!
"ஆமாம். பார்த்தேன்.." என்றார் பெரியப்பா.
"என்னது? பார்த்தேன்னு சொல்லிட்டு இழுக்கறயே, என்ன சொல்லு!"
ஸ்ரீ சரணர், வந்தவர் எதோ சொல்ல நினைக்கிறார், அதைக் கேட்பது சரியா தவறா என்று புரியாமல் இருக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு மேலும் சொல்லுமாறு ஊக்கப்படுத்துகிறார்!
பெரியப்பா : "இல்ல, மஹரிஷியைப் பார்த்தேன். நல்ல தரிசனம். எல்லாரோடையும் சேர்ந்து சாப்ட்டார்..."
ஸ்ரீ சரணர் : "சாப்டார்னு இழுக்கறயே! என்ன, ரமணர் இட்லி சாப்ட்டாரோ? அதானே?"
பெரியவாளுக்குத் தெரியாதது ஏதாவது உண்டா என்ன! பெரியப்பாவின் சந்தேகத்தை சரியாகப் பிடித்து விட்டார் !
பெரியப்பா : "ஆ..ஆமாம். சாப்ட்டார்"
ஸ்ரீ சரணர் : "என்னடா இது, இங்க இவா இட்லி சாப்டரது இல்லையே, மஹரிஷி மட்டும் சாப்ட்டாரே ..ந்னு பாக்கறையோ?"
பெரியப்பா : "ஆ ..ஆமாம் பெரியவா"
ஓரு புன்சிரிப்போடு ஸ்ரீ சரணர் சொல்ல ஆரம்பித்தார்.
"அவா எல்லா ஆஸ்ரம நிலையயும் தாண்டியாச்சு. அவாளுக்கு, மடம்னு ஒரு கட்டும் காவலும் இல்லை. ஆனா, இங்க அப்படி இல்லை. இந்த மடத்துக்குன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு. ஓரு கட்டுத் திட்டம் இருக்கு. அதையெல்லம் காப்பாத்த வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. அதனாலதான் இங்க இட்லி சாப்படர வழக்கம் இல்லை. புரிஞ்சுதா?"
"ம்..ம்" என்று தலையாட்டினார் பெரியப்பா.
ஸ்ரீ சரணர் : "சரி. அங்க வேறென்ன நடந்தது?"
பெரியப்பா : "நாங்கள்ளாம் சாயங்காலமா தரிசனத்துக்குப் போயிருந்தோம். அப்போ, மஹரிஷியோட திருமுகத்தையே பார்த்துண்டு இருந்தேன். டக்குன்னு ஒரு சமயத்துல, அவர் என்னைப் பார்த்தார். அவரோட கண்கள் என் கண்களைப் பார்த்தவொடனே, எனக்கு ஏதோ ஆயிடுத்து. ஸ்மரணையே போனா மாதிரி இருந்துது. உடம்பு லேசா ஆன மாதிரி இருந்தது. ரொம்பவும் ஆனந்தமா இருந்துது. அந்த மாதிரி எவ்வளவு நேரம் இருந்தேன்னு தெரியலை. திடும்னு ஸ்மரணை வந்த போது மஹரிஷியோட பார்வை வேற யார் பக்கமோ திரும்பியிருந்தது...."
ஸ்ரீ சரணர் : "என்ன ஆச்சுன்னு தெரியலையோ?"
பெரியப்பா : "ஆமாம்"
ஸ்ரீ சரணர் : "அந்த மாதிரியே இருந்துட்டா, ரொம்ப நன்னா இருக்கும்னு தோணறதோ?"
பெரியப்பா : "ஆமாம்"
பெரியவா மென்மையாகச் சிரித்தார். சற்று நேரம் மௌனமாக இருந்தார். பின் மெல்லிய குரலில் சொன்னார் :
"அவா உன் மனசை சித்த நேரம் இல்லாமப் பண்ணியிருக்கா. மனசே இல்லாம போயிடுத்துன்னா, ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்துல, ஒரு துளியை உனக்குக் குடுத்து இருக்கா. அடிக்கடி சன்னதிக்குப் போய் தரிசனம் பண்ணிக்கோ" .
பெரியப்பா, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு திரும்பி விட்டார். இதன்பிறகு சில முறை, மஹரிஷிகளையும் தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சி பற்றிப் பலமுறை என்னிடம் கூறி சந்தோஷப்படுவார் எனது பெரியப்பா. மஹரிஷிகளைப் பற்றிக் கேட்டபோது "பெரியவா எப்படி இருக்கா" என்று கேட்டது; "சாப்டார்னு இழுக்கறயே! என்ன, ரமணர் இட்லி சாப்டாரோ? அதானே?" என்று கேட்டது; "அவா உன் மனசை சித்த நேரம் இல்லாமப் பண்ணியிருக்கா" என்று விளக்கம் சொன்னது; "அடிக்கடி சன்னதிக்குப் போய் தரிசனம் பண்ணிக்கோ" என்று வழி காட்டியது என்று பெரியவா சொன்ன ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார் அவர்!
No comments:
Post a Comment