Friday, June 19, 2015

வரமொன்றுஉன்னைக்கேட்டேன்

வரமொன்றுஉன்னைக்கேட்டேன்

காஞ்சி வாழ் தேவே! எந்தன் கருத்தில் வாழ் ஞான தேவே
தஞ்சமென்றுனை அடைந்தேன்.வரமொன்று உன்னைக் கேட்டேன் .

பொருட்செல்வம் ஏதும் வேண்டாம்நவநிதிக் குவியல் வேண்டாம்
பெரும்புகழ் ஒன்றும் வேண்டாம்பதவிகள் எனக்கு வேண்டாம்

குறைவிலா வாழ்வும் வேண்டாம். நிகரிலா வளமும் வேண்டாம்
கறையிலா ஞானம் வேண்டாம்.  மறுவிலாக் கீர்த்தி வேண்டாம்

இறவாத நிலையும்  வேண்டாம். அமரனாய் இருக்க வேண்டாம்.
பிறப்பினி வேண்டாமென்னும் வரம்கூட எனக்கு வேண்டாம்

வேறென்ன வரம்தான் வேண்டும்? என்று நீ கேட்கிறாயோ ?
வரம் கேட்கும் தகுதி உண்டா?  என்றும் நீ கேட்கிறாயோ?

நிறைய நான் பிறக்க வேண்டும்!  மனிதனாய் இருக்க வேண்டும்
நிறைய நான் பிறக்க வேண்டும்! மனிதனாய் இருக்க வேண்டும்!

என்ன ஆயிற்றிவனுக்கென்று, எண்ணி நீ சிரிக்கிறாயோ?
என்ன ஓர் வரமிதென்று, எண்ணி நீ நகைக்கிறாயோ?

காரணம் சொல்லுகின்றேன். சற்று நீ செவிமடுப்பாய்.
காரணன் நீயே அன்றோ! எல்லாமே உன்னால் அன்றோ!

பிறவியாம் பிணியைத் தீர்க்கும் பெரியவா உன்னை அண்டி
பிறவிகள் கேட்க வைத்த நிலையுமே உன்னால் அன்றோ!

உன்னை நான் கண்டதில்லை. உன்பதம் தொழுததில்லை.
உன்பேச்சு கேட்டதில்லை. உன் சேவை செய்ததில்லை

இந்த ஓர் தேகத்தின் மேல், உன் பார்வைபட்டதில்லை.
உன் கரத்தீர்த்தமில்லை . உன் ஏவல் பணிந்ததில்லை

உன் தொண்டர் குழாத்துடன் நான் ஒரு நாளும் இருந்ததில்லை 
உன் தொண்டர் அவர்க்கு என்றும் ஏதுமே செய்ததில்லை

வேதம் நான்ப டித்ததில்லை. பூஜைகள் செய்ததில்லை
வேதம் செழிக்கவென்று ஒன்றுமே செய்ததில்லை

பக்தியும் இல்லை சித்த சுத்தியும்எ னக்கு இல்லை
முக்தியை வரமாய்க் கேட்கும் தகுதியும் எனக்கு இல்லை

கருணைக் கடல் நீ வந்தும், அருள்மழை நீயே தந்தும்
ஒருதுளி படவும் இல்லை. என் குறை நீங்கவில்லை

இத்தனைக் குறையும் தீர, நிறைய நான் பிறக்கவேண்டும்
அத்தனை பிறப்பிலும் நான் மனிதனாய் இருக்கவேண்டும்

நிறைய நான் பிறக்கவேண்டும்! மனிதனாய் இருக்கவேண்டும்!
வேறெதும் சிந்தையின்றி, உன்னையே நினைக்கவேண்டும்

நானிங்குப் பிறக்கும்போது, நீயும் என்கூட வேண்டும்!
நான் பிறந்து வரும்போதெல்லாம், நீயுமே வரவும் வேண்டும்!

உன்பாதம் பணிய வேண்டும். உன்சேவை எனக்கு வேண்டும்
நேரிலே உன்னைப் பார்க்கும் பெரும்பேறும் எனக்கு வேண்டும்

உன் அருட்பார்வை வேண்டும். உன் கரத்தீர்த்தம்  வேண்டும்
உன் உபதேசம் பெற்று, நானுமே உய்யவேண்டும்

உன் தொண்டர் குழாத்துடன் நான் கூடியே களிக்க வேண்டும்.
உன் நாமம் சொல்லிச் சொல்லி, என் நாவும் இனிக்க வேண்டும்

உன் தொண்டர் பாதம் எந்தன் சிரத்திலே படவும் வேண்டும்
உன் தொண்டர் சேவை ஒன்றே என் வேலை ஆகவேண்டும்

உன் தொண்டர் குழாம் கிடைத்து, உன் பாதமலர் கிடைத்து
உன் அருட்பார்வைபட்டு, உன் சேவையும் கிடைத்தால்

எத்தனைப் பிறந்தால் என்ன! என்னதான் ஆனால் என்ன!
முக்தியும் மோக்ஷமும்தான் இல்லாமல் போனால் என்ன!

என்னை நீ ஆண்டருள்வாய்!  உன் சேயாய்க் கொண்டருள்வாய்!
உன் பாதகமலம் தன்னில் ஒரு பூவாய் அணிந்தருள்வாய்!

ஜெயஜெயசங்கர! ஹரஹர  சங்கர!
ஜெயஜெயசங்கர! ஹரஹர  சங்கர!

No comments:

Post a Comment