Monday, June 1, 2015

Tomorrow : Maha Anusham : Poem on Spending one day at Periyava Sannadhi

நாளை மஹா அனுஷம். பெரியவா அவதரித்த தினம். (Written on 01.06.2015)

பெரியவா தரிசனத்தில் ஒரு நாள் முழுதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.

அப்படி, அவர் சந்நிதியில் இருந்து, அவரது பூஜையை எல்லாம் கண்டு இன்புற்றவர்கள், பாக்கியசாலிகள்.

அந்த பாக்கியம் ஏதும் அடியேன் செய்யவில்லை. பெரியவா பூஜையைப் பார்க்கும் பாக்கியமோ, அவரது திருக்கரங்களால் தீர்த்தம் பெரும் பாக்கியமோ நான் செய்யவில்லை.

அவரது சந்நிதியில் நின்று அவருடன் உரையாடும் பாக்கியமோ, அவரது காலை வேளை விஸ்வரூப தரிசனம் காணும் பாக்கியமோ, அடியேனுக்கு இல்லை .

இருந்தாலும், மனதிலே பெரியவா சந்நிதியிலே ஒரு நாள் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்..

ஒரு சிறிய பாடல் பிறந்தது ..

பாடலின் ஒவ்வொரு சரணத்தையும் ஒரு ராகத்திலே பாடுவதும் ஒரு சந்தோஷம்தான்..

நன்றாகப் பாடத் தெரிந்தவர்கள் யாரேனும் பாடி 'tape' செய்து அனுப்பினாலும்கூட நன்றாக இருக்கும்...

பெரியவா அனுக்ரஹத்தில், மனதில் நினைத்துப் பார்த்தபடி, அவரது சன்னதியிலேயே மனம் இருக்கட்டும். அவரது முகமே மனதில் நிறைந்து இருக்கட்டும். அவரது அடியிணைகளே என்றும் இங்கு அடியேனை வழிநடத்தட்டும்.

பெரியவா தரிசனத்தில் ஒரு நாள் : பாடல்

1. பொழுது புலர்தல்
பொழுது புலர்ந்தது இருளும் மறைந்தது
தொழுதுனைப் பணிந்திட அடியரும் வந்தனர் 
விழுத்துணை நீயென, முதற்பொருள் நீயென
பழுதற அறிந்தோம் உன்னடியிணைப் பணிந்தோம் (பூபாளம்)


2. விஸ்வரூப தரிசனம்
விஸ்வரூப தரிசனம் பெருவோம் நின்
ஸுஸ்வரூப தரிசனம் பெருவோம் மோஹன
ஸ்வரூப தரிசனம் பெருவோம் தயா
ஸ்வரூப நின் தரிசனம் பெருவோம் (மோஹனம்)


3. காலை பூஜை
செங்கமலக் கரங்கள் பூஜை செய்யும் நேரம்
மங்கல பூஜையில் மனம் லயித்திடுவோம்
எங்களை மறந்து இன்புற்று இருப்போம்
பங்கய மலர்முகம் கண்டு வரம் பெருவோம் (சாரங்கா)


4. தீர்த்தம் வழங்குதல்
வரிசையில் நின்று தீர்த்தம் பெற்றிடுவோம்
தரிசனம் மறுமுறை பெற்று உய்ந்திடுவோம்
பரிசெனப் ப்ரசாதம் பெறக் களித்திடுவோம் ஐயன்
கரிசனம் கிடைக்க எமை மறந்திடுவோம் (அடாணா)

5. பிக்ஷை செய்தல்
ஐயனும் பிக்ஷை செய்தான் எங்கள் ஐயனும் பிக்ஷை செய்தான்
கையளவே அரிசிப் பொரியதை உண்டு இந்த
வையகம் முழுவதும் ஆண்டிடும் அரசன் நாம்
உய்யவே, தவக் கோலம் கொண்ட எம் இறைவனாம் (ஆனந்த பைரவி)



6. ஸ்ரமப் பரிகாரம் செய்தல்
ஸ்ரமப் பரிகாரம் செய்தான் எங்கள் ஐயன்
த்ரணமாய் இவ்வுடலையே நினைத்திடும் அவனுமே
க்ரமமாய் உலகம் நடக்கவே தானிங்கு
வ்ரதமே ஏற்ற அம்முனிவனும் சற்றேயிங்கு (சுருட்டி)


7.பக்தர்களுடன் உரையாடி குறை கேட்டறிதல்
குறை கேட்டறிந்தனனே மக்கள் மன
குறை தீர, முறையுமிங்குறைத்தனனே
மறையது சொல்லும் தர்ம நெறிதவராதிங்கு
விரைவாய் அனைவரும் துயரது களையவே (ஹம்ஸாநந்தி)


8. மாலை பூஜை
மாலைப் பூஜை செய்தான் எங்கள் ஐயன்
சோலைமலரெடுத்து பிறைமதி சிவனுக்கு
வேலையும் மிஞ்சிடும் கூர்விழியாள் உமைக்கு
பாலையும் பழித்திடும் இன்மொழி காமாக்ஷிக்கு (மலயமாருதம்)


9. இரவு கண்ணயர்தல்
தவராஜன் கண்ணயர்ந்தான் மேனாவிலே
பவரோகம் அகற்றியே நமையெலாம் காப்பவன்
சிவஸ்வரூபன் நடமாடும் தேவன்
சுபமே தரும் அந்த எழில்மிகு பாதன் (நீலாம்பரி)


10. பலஸ்ருதி
உந்தனருள் சன்னிதியில் வாழ் நாளெலாம் இருந்து 
உந்தனெழில் மலர்முகம் என்னாளுமே கண்டு
உந்தன் திருப்பதங்களில் வீழ்ந்திங்கிருக்கவே
உந்தன் அடியாரெமக்கு வரமளிப்பாய் ஐயா (மத்யமாவதி)


No comments:

Post a Comment