Sunday, June 28, 2015

Pathathi Kesamai Periyava paatu

நாளை (29.6.2015) அன்று, அனுஷம்.

இன்றே கூட, சில இடங்கலில் அனுஷம் கொண்டடுகிறார்கள் : ஞாயிற்று கிழமையாயிருப்பதால், நிறைய பேருக்குக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியும் இல்லையா!

இந்த நாளில், பெரியவாளை, பாதாதி கேசாந்தம் பாடி அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. பாதமலர்களுக்கே ஆயிரம் பாடல் பாடலாம்! ஆனாலும், எனக்குத் தெரிந்த தமிழில், பெரியவாளைப் பற்றி, பாதம் முதல் தலைமுடியப் பாடி அனுபவித்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அனுஷத்திற்கு அனுஷமாவது, ஒரு முறையாவது, ஒரு கணமாவது, பெரியவாளைப் பற்றி நினைக்க முடிவதும் பெரியவாளின் அனுக்ரஹம்தான்.

பெரியவா சரணம்.


பாதரக்ஷை:


பொற்பதமதைத் தாங்கும் மூவுலகும் வணங்கும்
அற்புதன் பாத ரக்ஷையே - சொற்களால்
விளங்குமோ உந்தன் பெருமை கற்களால்
விளங்குமோ கோவிலின் சிறப்பு (1)


பாதமலர்:



பொன்மலர்த்தாள் போற்றி! அடியார்கள் மனதிலே
நின்றிடும் பதம் போற்றி! - என்றுமே
எங்களைக் காத்திடும் மங்கலம் சேர்த்திடும்
செங்கமலத் தாளிணை போற்றியே! (2)




திருக்கால்கள்:



அடியார்கள் தமைகாக்க நடந்த கால்கள்
செடியாய வல்வினையும் தீர்க்கும் - கொடிய
பிணியெலாம் மாற்றும் வளமெலாம் சேர்க்கும்
பணிந்திடும் அன்பர் அவர்க்கே (3)




திருவயிறு:
 























மண்ணொரு நாளுண்டீர்! நஞ்சதுவும் தானுண்டீர்!
விண்ணவரேத்தும் மாயனாய் சிவனுமாய் - அண்ணலே!
அன்னாளுண்ட அனைத்தும் மிகுதியோ? திருவயிறு
இன்னாள் உபவாசம் இட்டீர்! (4)



திருமார்பு:



திருவாசம் புரிகின்ற பொலிகின்ற திருமார்பு
கருவாசம் அகற்றிடும் கைதொழ - நறுவாசம்
வீசும் துளபமும் ருட்ராக்ஷ மாலையும்
பேசுமே உந்தன் சிறப்பு (5) 



திருக்கரங்கள்:


அறம்வளர் நாயகன் கரமலர் அருள்வரம்
பரம், பொருள், இதம்தரும் சுகம்தரும் - சிறந்துயர்
இனம் குலம் குணம்தரும் வளம்தரும்
தினம்தொழும் அன்பருக் கென்றுமே (6)


திருத்தண்டம்:


நீதி தேவதைத் தாங்குசெங்கோலிதோ?
ஆதி வினைதீர்க்கும் வேலிதோ? - சோதிப்
பிழம்பவன் ஏந்திடும் தண்டமே அவன்தன்
கழலிணை பணியவே அருள் (7)


திருக்கழுத்து:


கறையிலா வாழ்வுகண்டு நஞ்சுண்ட கறையுமிங்கேதும் 
உரையாது ஓடியதோ? விமலா - நிறையினோர் (நிறையின் ஓர்)
உருவாய் வந்த நீலகண்டா, யாம்பணியும்
குருவே, வந்தெழுந்து அருளுகவே (8)


திருமுக மண்டலம்:





அறுமுகம் எல்லாம் ஒருமுகமாய் வந்த
குருமுகம், என்றும் நமக்கு - அருள்முகம்
மனங்குவித்து ஒருமுகமாய்ப் பணிந்தார்க்கு
தினமுமின்பம் தருமுகம் வாழியவே (9)




திரு அதரமும் குமிழ் சிரிப்பும்:


பொன்முகமதனில் ஒளிரும் செவ்வதரமும் 
இன்முகமதனில் கமழ் குமிழ்சிரிப்பும் - உன்முகமதில்
கண்டோம்! மெய்மறந்திருந்தோம்! வேறெதும்
வேண்டோம்! சரண் நீயே! (10)


திருநாசியும் விடும் மூச்சும்:



உலகத்து உயிரெலாம் உயிர்த்திடும் ஒரூமுச்சாய்
நலம்செயும் வேதத்தின் உயிர்மூச்சாய் - நிலமென்னும்
நல்லாளும் நிம்மதியாய் விடும் மூச்சாய்வந்த
நல்லானைப் பணிந்தோம் உகந்து (11)




திருநயனங்கள்:


கண்களிரண்டும் நம்மைக் காந்தமென இழுக்க
விண்மதிரவியாய் உலகிற்கொளி கொடுக்க - தண்ணென்று
வாடியே வந்தவர் தாபமெல்லாம் தணிக்க
நாடினோம் உன்னை நயந்து (12)



திரு நெற்றியும் விளங்கும் திருநீறும்: 

முழுமதி முகத்திலே ஓடிடும் ஆறென
விழுமிய நெற்றியில் விளங்கிடும் - வழுவறு
நீறது போக்கிடும் வேருடன் பிணியெலாம் 
வேறெதும் உண்டோ அரண் (13)


வில்வமும் குஞ்சிதபாதமும் சாற்றிய தலை:























விரித்தசெஞ்சடையுமின்றி பிறைமதிப் புனலுமின்றி
ஹரிஹரனுவக்கும் வில்வம் தலையிலே - தரித்திங்கே
குஞ்சிதபாதம் சூடி அணியுற இருக்குமுன்னை
தஞ்சமென்றடைந்தோம் பணிந்து (14)




பலஸ்ருதி:



பாதாதிகேசமாய் ஐயனைப் படித்தார் ஜகன்
மாதாவின் இன்னருளைப் பெறுவார் - வேதாவும்
எழுதிடான் தலையெழுதின்னொருமுறை இங்கு
பழுதுடன் நாம் பிறக்குமாறு (15)

No comments:

Post a Comment