Friday, July 31, 2015

உன்னை சரணடைந்தேன் என் ஐயா

ராகம் : புன்னாகவராளி

உன்னை சரணடைந்தேன் என் ஐயா
உன்னை சரணடைந்தேன்

அன்பே, அமுதே, அருளே, இறையே,
என்றும் உன்பதம் கிடைத்திடவே இன்று (உன்னை)

காமமும் மோகமும் கோபமும் க்ரோதமும்
பாவி என்னை மிகப் படுத்துவதால் இன்று (உன்னை)

காசும் பணமும் ஒன்றே குறியாய்
காலமெல்லாம் வீண் அடித்துவிட்டேன் - இன்று (உன்னை)

பிறந்ததிலிருந்து உன் ஸ்மரணை இல்லாமல்
வயதினை வீணே கழித்துவிட்டேன் - இன்று (உன்னை)

இறப்பெனக்கென்று வரும் என அறியேன்
இருந்திடும் காலம் உனக்கெனவே - இன்று (உன்னை)

தெய்வத்தின் குரல் கேட்க மனம் விரும்பும்

ராகம் : ஹமீர் கல்யாணி


தெய்வத்தின் குரல் கேட்க மனம் விரும்பும் - அந்த
தெய்வத்தின் குரல் கேட்க மனம் கனியும் - எங்கள் மனம் கனியும்

தெய்வத்தின் முகம் பார்க்க மனம் துடிக்கும் - அந்த
தெய்வம் நம் முகம் பார்க்க மனம் உருகும் -எங்கள்
மனம் உருகும்

தெய்வத்தின் தாள் பணிய உடல் சிலிர்க்கும் - அந்த
தெய்வத்தின் தாள் பணிய பிணி அகலும் - பிறவி
பிணி அகலும்

தெய்வத்தை நாம் நினைக்க பயம் அகலும் - அந்த
தெய்வம் நம்மை நினைக்க வளம் பெருகும் வாழ்வில் வளம் பெருகும்

திருவடி சரணம் என அடைந்தேன்

ராகம் : ஷண்முகப்ரியா

திருவடி சரணம் என அடைந்தேன் - உன்
திருவடி சரணம் என அடைந்தேன் - குருமுர்த்தே உன்
திருவடி சரணம் என அடைந்தேன் (திருவடி)

அபயம் என்றோர்க்கு அருளும் திருவடி
எமபயம் நீக்கி காக்கும் திருவடி (திருவடி)

தில்லை அம்பலத்தில் ஆடிய திருவடி
காலனைக் காலால் உதைதத திருவடி
பிட்டுக்கு மண் சுமந்து நடந்த திருவடி
நண்பனுக்காக தூது நடந்த திருவடி (திருவடி)

மூவுலகும் நின்று அளந்த திருவடி
அகலிகை சாபம் போக்கிய திருவடி
கானகம் முழுதும் கடந்த திருவடி
பாண்டவர்க்கு தூது நடந்த திருவடி (திருவடி)

பதின்மூன்று வயதில் பயணித்த திருவடி
மும்முறை பாரதம் வலம்வந்த திருவடி
நடந்தே எங்கும் சென்றிட்ட திருவடி
பக்தர்கள் வாட்டத்தை போக்கிடும் திருவடி (திருவடி)

Periyava : Ashtothara Sadha Namavali :: 101

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman
நாத பிந்து கலாதீத வைபவாய நமோ நமஹ:" (101)

"நாதம் பிந்து கலை இவைகளுக்கு அப்பாற்பட்ட வைபவமுடையவருக்கு நமஸ்காரம்" (101)


obeisance to Him whose prowess is beyond nada (=sound), bindu (=finite sound) and kala (=manifest sound) (101)

Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்



நாதமே வடிவாய் வந்த நாதனைவேதம் தேடும்
நாத பிந்து கலாதீத போதனைசாமகானம்
ஓத வந்தருளும் ஞான சீலனைமலர்ப்
பாதனைசுநாதனைபணிந்தனம் போற்றி போற்றி (101)

Thursday, July 30, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 100

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்



The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"சஹஜானந்த சம்பூர்ண சாகராய நமோ நமஹ:" (100)

"தானாக எப்போதும் ஆனந்தத்தால் நிரம்பிய சமுத்ரம் போல் இருப்பவருக்கு நமஸ்காரம்" (100)

"Obeisance to Him who is like an ocean filled with innate Ananda" (100)


Tamil poems by Visvanathan


பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்




இன்பத்தின் பெருவெளியே! எப்போதும் நிறைந்தமுதம்
நின்றூரும் ஆனந்த சாகரமே! அற்புதமே!
அன்பெனும் பிடிக்குள் தானே அகப்படும் மலையே! இங்கே
வந்த என் கருணைக் கடலே! உன்பதம் போற்றி போற்றி (100)

Wednesday, July 29, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 99

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman


"ஸ்வபாவ மதுரோதார கம்பீர்யாய நமோ நமஹ:" (99)

"ஸ்வபாவமாகவே இனிமையானதும் கம்பீரமானதும் ஆழமானதுமான சமுத்ரம் போன்றவருக்கு நமஸ்காரம்" (99)

Obeisance to Him who is like a deep ocean of natural sweetness and hospitality (99)


Tamil poems by Visvanathan


பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்




வானத்து அமுதாயிங்கு பிறவியாம் பிணியைப் போக்கும்
ஆனந்தக் கடலாயிங்கு கவலையாம் தாபம் தீர்க்கும்
ஞானத்து விளக்காயிங்கு அஞ்ஞான இருளை நீக்கும்
மோனத்தவம் விட்டிங்கு ஏகினான் பதமே போற்றி (99)

Periyava : Ashtothara Sadha Namavali : 98

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"நிரந்தர மஹானந்த சம்பூர்ணாய நமோ நமஹ:" (98)

"நிரந்தர பரமானந்தம் படைத்த ஆழ்ந்த மனமுள்ளவருக்கு நமஸ்காரம்" (98)

Obeisance to Him whose whole being permeates with the eternal great Ananda (98)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



பரிபூரணானந்தம் பெருகுமொரு சுடர் வடிவம்
விரிஞானம் தவழ்கின்ற முகம் காண மனம் நிறையும்
அறியாமை அகலும் வினை முழுதாக அழியும் நிதம்
பரிவோடு கருணைபுரி முனிவந்தாள் போற்றி போற்றி (98)

Monday, July 27, 2015

Periyava Pamalai : Ashtothara Sadha Namavali : 97

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"நிர்நித்ர தேஜோவிஜித நித்ராத்யாய நமோ நமஹ:" (97)

"இடை இல்லாத பேரானந்தத்தால் வெல்லப்பட்ட நித்திரை சுகம் உடையவருக்கு நமஸ்காரம்" (97)

"Obeisance to Him whose sleep is taken over by the unbroken and great Ananda" (97)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



ஆங்காரம் அடக்கி கொடும் ஐம்புலனைச் சுட்டறுத்து
ஓங்காரம் மனம் நிறைத்து ஆனந்தம் அதில் திளைத்து
நீங்காமல் சிந்தை இறையதிலேயே நிலைத்தென்றும்
தூங்காமல் தூங்கி சுகம் பெருவோய்நீ போற்றி போற்றி (97)

Sunday, July 26, 2015

Periyava Pamalai : Ashtothara Sadha Namavali : 96

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"வேத மார்கப் ப்ரமாண ப்ரக்யாபகாய நமோ நமஹ:" (96)

"வேத மார்கத்தைப் ப்ரமாணமாக நம்புவதற்கு உண்டான தகுதியை வெளிப்படுத்துபவருக்கு நமஸ்காரம்" (96)

"Obeisance to Him who proclaims and establishes the belief in premise and proof  of the Vedhas" (96)


Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்




சுருதியை மெய்யென்றிங்கே ஐயமே இல்லாவண்ணம்
உறுதியாய் உலகமெல்லாம் அறியவே இங்குவந்து
அறுதியிட்டுரைத்து வேத மார்கமே நிலைக்க வந்த
இறுதியும் முதலுமற்ற பூரணன் பதமே போற்றி! (96)

Periyava : உனைக் காண வந்தேன் : Raagam : Kanada

Written on April 5th 2015
Today, came back from Chennai trip to Bangalore via Kanchipuram. ரொம்ப அற்புதமான தரிசனம். பெரியவ சன்னதி, காமாக்ஷி ரெண்டு தரிசனமும் ரொம்பவும் மனசுக்கு நிறைவாக இருந்தது. பேசும் தெய்வமாக இல்லையென்றாலும், பேசா தெய்வமாக பெரியவா இருக்கா. 'வா, எப்ப வந்தே' என்று பக்தர்களைக் குளிரக் குளிரக் கேட்கும் குரல் இல்லைஎன்றாலும், 'உனக்கு என்ன வேணும்' என்று கேட்டு அருள் செய்யும் அந்த தெய்வம் கேட்காமலே கொடுப்பதையும் உணர முடிகிறது. பெரியவா சரணம்.
பெரியவாளுக்கு இந்தப் பாடல் அர்ப்பணம்.
ராகம் : கானடா
பல்லவி
உனைக் காண வந்தேன் - இங்கு
உனைக் காண வந்தேன்
காஞ்சி மா நகர் தனில்
உன்னிடம் தேடி - இங்கு (உனைக் காண)
அனுபல்லவி (துரிதம்)
பேசிச் சிரித்து அருள் செய்திடும்
மூர்த்தியைக் காணேன் இங்கு காணேன்
மோனமாக முகமலர்ந்தருள் புரிந்திடும்
ஸிலாமூர்த்தியைக் கண்டேன் - இங்கே (உனைக் காண)
சரணம் (துரிதம்)
"வா"என்றழைத்து வாட்டம் போக்கிடும்
வார்த்தை ஒன்று நீ சொல்லிடக் காணேன்
வார்த்தை ஏதுமின்றி சன்னிதானமதில்
வருத்தமத்தனையும் தீர்ந்திடக் கண்டேன் (உனைக் காண)
என்ன வேண்டுமென்று கேட்டு நீ அழைத்து
வேண்டும் வரம் ஒன்றும் தந்திடக் காணேன்
வேண்டும் இது என்று கேட்டிடும் முன்னமே
தந்துவிடும் உன் குறு நகை கண்டேன் (உனை காண)

Periyava : உன்னைச் சரணமென்று நம்பி வந்தேன் ஐயா : Raagam : Suba Banthuvarali

Written on April 1st 2015

ராகம் : சுபபந்துவராளி
உன்னைச் சரணமென்று நம்பி வந்தேன் ஐயா
உன்னைச் சரணமென்று நம்பி வந்தேன்
என்னை நீ பாராயோ? உன்பதம் சேராயோ? (உன்னை)
நீயே கதி என்று, உன் பாதம் துணை என்று
தீனன் உனை நம்பி வந்தேன் இன்று
தீனன் உனை நம்பி வந்தேன் (உன்னை)
பாவி இவன் என்று, பக்தன் இல்லை என்று,
நீயும் எனை வெறுத்தால், ஏற்கவும் நீ மறுத்தால்,
வேறெங்கு செல்வேன்? வேறென்ன செய்வேன்? (உன்னை)
தாயடித்தால் நானும் தந்தையிடம் செல்வேன்
தந்தையடித்தாலோ தாயிடம் செல்வேன்
தாயுமாய் தந்தையுமாய் இருப்பவன் நீதானே
நீயே எனையடித்தால், நானெங்கு செல்வேன்? யாரிடம் சொல்வேன்? (உன்னை)

Periyava : Periyavalum Sri Ramachandranum

March 28th 2015

Today, listened to Sri.Ganesa Sarma mama's upanyasam on Periyava. Today is Sri Rama Navami. So, Mama combined Rama Navami with Periyava avatharak Kandam. Wonderful. Blessed to listen about periyava and how periyava is none but SriRama Himself.
A small tribute :
தருமம் ஓர் பிறப்பெடுத்து ராமனாய் நடந்ததுண்டு
தருமமே மீண்டும் வந்து நம்மிடை நடந்ததின்று!
தருமமாம் ராமன் இன்று, வில்லும் அம்பும் விடுத்து,
ஆருயிர் சீதை இன்றி, அரச வாழ்வேதுமின்றி
காமனை எரித்த அந்த சங்கரன் ரூபம் கொண்டு
காமனை உயிர்த்த அந்த காஞ்சிமா நகரம் வாழும்
காமாக்ஷித் தாயாய் வந்து அன்பினை ஊட்டி நின்று
காமகோடி பீடம் ஏறி உலகெலாம் உய்ய நின்றான்
ராமனாய் வந்தபோது முனிவர்கள் மகிழ்ந்து நின்றார்
சம்புவாய் வந்தபோதோ முனியெலாம் வணங்கி நின்றார்
ராமனாய் வந்த நாளில் ராவணன் மாண்டு போனான்
சங்கரன் உதித்த நாளில் கலியுமே வீழ்ந்து போனான்
ஸ்ரீராமன் சொன்ன வார்த்தை என்றுமே தப்பிடாது
ஸ்ரீசரணர் சொன்ன வார்த்தை என்றுமே பொய்த்திடாது
ஓரே ஒரு பெண்ணை மட்டும் ஸ்ரீராமன் நினைத்திருந்தான்
ஸ்ரீசரணருக்கோ அந்த பெண்ணுமே தாயாய் வந்தாள்
தனக்கு ஒர் உதவி செய்த யாரையும் மறவான் ராமன்
உதவிதான் செய்ய வந்தோர் எவரையும் மறவார் சம்பு
அணிலுக்கும் ஸ்பரிசம் தந்து உயர்த்தினான் அந்த ராமன்
புரந்தரன் வில்வம் தந்தான். மோக்ஷமே தந்தார் சம்பு
ராமனாய் வந்த தர்மம் சம்புவாய் வந்த காதை
கணேச சர்மா மாமா சொல்லிடக் கேட்டு வந்தோம்
ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தி பிறந்த அத்தினமாம் இன்று
பெரியவா பிறந்த கதையும் கேட்டுமே உருகி நின்றோம்
பெரியவாளுக்கும், அந்தப் பெரியவா கதையையும், ஸ்ரீராமன் காதையையும் சேர்த்துச் சொன்ன கணேச சர்மா மாமாவிற்கும், அனந்த கோடி நமஸ்காரங்கள்!

Periyava : பெரியவா சரணம் என்றால் பிணியெலாம் போய்விடாதோ? : Saveri

ராகம் : சாவேரி
பல்லவி :
பெரியவா சரணம் என்றால் பிணியெலாம் போய்விடாதோ?
பெரியவா சரணம் என்றால் வினையெலாம் ஒய்ந்திடாதோ? (பெரியவா சரணம்)
அனுபல்லவி:
ஏழேழு ஜன்மம் செய்த புண்ணியம் உன்னைப் பெற்றோம்
ஏழேழ் பிறப்பும் உந்தன் சேவையே வரமாய்க் கேட்டோம் (பெரியவா சரணம்)
சரணம்:
அன்பெனும் மந்திரம்தான் உரைத்தவன் நீயே அன்றோ?
அன்பே சிவமாய் இங்கு இருந்ததும் நீயே அன்றோ?
அன்பெனும் பிடிக்குள் வந்த மாமலை நீயே அன்றோ?
அன்பர்கள் அபயம் என்றால் காப்பதும் முறையே அன்றோ? (பெரியவா சரணம்)

Periyava : உறவென உருகி நின்றேன்

குருவெனப் பணிந்து நிற்பார் - ஜகத்
குருவெனப் பணிந்து நிற்பார்- காஞ்சி ஜகத்
குருவெனப் பணிந்து நிற்பார்.
முனியென நினைத்து நிற்பார் - சீலமிகு
முனியென நினைத்து நிற்பார் - தவ சீலமிகு
முனியென நினைத்து நிற்பார்.
இறையென இறைஞ்சி நிற்பார் - சங்கர
இறையென இறைஞ்சி நிற்பார் - சம்போ சங்கர
இறையென இறைஞ்சி நிற்பார்.
நானோ,
உறவென உருகி நின்றேன்- 'தாத்தா' என்ற
உறவென உருகி நின்றேன்- 'உம்மாச்சித் தாத்தா' என்ற என்
உறவென உருகி நின்றேன்
வயதில் மூத்த ஓர் - நண்பனாய்க்
கருதி நின்றேன் - ஆருயிர் நண்பனாய்க்
கருதி நின்றேன்
என்மனக் குறையையெல்லாம் உன்னிடம் சொல்லி நின்றேன்
பிடித்த சங்கீதமெல்லாம் உன்னிடம் பாடி நின்றேன்.
சுவைத்த நற்றமிழையெல்லாம் உன்னிடம் கூறி வந்தேன்.
குருவை, முனியை, இறையை இங்கே
உறவாய் உயிராய் நினைத்தல் சரியோ?
அறியேன் நானும், சிறியேன் ஐயா!
குருவே - முனியே - இறையே - எனினும்,
உறவாய், ஆருயிர்க்குயிராய் இங்கு
வருவாய், வந்து அருள்வாய் ஐயா!

Periyava : அத்தனைக்கும் உன்னிடமே

Periyava : அத்தனைக்கும் உன்னிடமே

மனதிலே குறையென்றால்
சந்தேகம் ஒன்றென்றால்
ஸன்னதிக்கு வந்திடுவோம்
கண்ணசைவில் பதில் பெறுவோம்
பிள்ளைக்குக் கல்யாணம்
பெண்ணுக்குச் சீமந்தம்
எம் இல்ல நிகழ்வுகளில்
அத்தனைக்கும் நீ வேண்டும்
வாழைமரம் காய்க்கவில்லை
வேப்பமரம் வளரவில்லை
சின்ன சின்ன ப்ரச்சினைக்கும்
எங்களுக்கு நீ வேண்டும்
அண்ணனுடன் ஆகவில்லை
தம்பியுடன் சுமுகமில்லை
உறவுகளின் சண்டைக்கும்
உன்னிடமே பதில் வேண்டும்
அத்தனைக்கும் உன்னிடமே
வந்திங்கே வாழ்வுற்றோம்
இன்றெங்கு சென்றிடுவோம்?
எம்குறையை முறையிடுவோம்?
பக்தர்கள் என்றாலோ
கனவிலும் நீ வந்திடுவாய்
படத்தில் இருந்தேயும்
புன்னகையால் பதில் கொடுப்பாய்
என் பக்தி போதாதே.
நான் எங்கு சென்றிடுவேன்?
எவ்வாறு உனை பார்ப்பேன்?
எப்படி உன் பதில் கேட்பேன்?
அழுதால் உனைப்பெறலாம்
ஆனாலும் எனக்குத்தான்,
அழக்கூடத் தெரியவில்லை
நானென்ன செய்திடுவேன்?
இத்தனை பக்தரிங்கே
யாரெனும் சொல்லுடுவீர்.
ஐயனைப் பார்த்திடவே
வழியொன்று உரைத்திடுவீர்.
வழியொன்று உரைத்திடுவீர்.

Saturday, July 25, 2015

Periyava Pamalai : Ashtothara Sadha Namavali : 95

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the 
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri 
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi 
Venkatraman

"வேத வேதாங்க தத்வ ப்ரபோதகாய நமோ நமஹ:" (95)

"வேதத்தின் தத்துவத்தையும் வேதாங்கத்தின் தத்துவத்தையும் அறியவைப்பவருக்கு நமஸ்காரம்" (95)

"Obeisance to Him who awakens the knowledge of the object of the Vedas and Vedangas" (95)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்




மறைபொருள் உணர்த்திட வந்ததோர் விழுப்பொருள்
குறைவறு முழுப்பொருள், அமரரும் தொழுதிடும்
இறையெனும் முதற்பொருள் அடிபணிந்தேகினோர்
நிறைவுரு வாழ்வடைந்துனதடி உறுவரே! (95)

Periyava : kurrap paamaalai : பெரியவா : குற்றப் பாமாலை

25.07.2015

நாளையும் நாளை மறு நாளும் அனுஷக் கொண்டாட்டங்கள்! இந்த அனுஷ வைபவத்தின் பொழுது, பெரியவாளைப் பற்றி ஸ்மரிக்கும்போது, பெரியவாளிடம் ஏதும் குறை இருக்கிறதோ என்று யோசனை செய்யத்தோன்றியது. சர்வேஸ்வரனிடம் குறை இருக்குமா என்ன? 

"ம்ம்..இருக்கே" என்று தோன்றியது. ஆறு குற்றங்கள் மனதில் தோன்றின. அவையே இங்கே, பாமாலையாக, "குற்றப் பாமாலையாக" மலர்ந்திருக்கின்றன. 

பெரியவா கடாக்ஷம்.  



பெரியவா : குற்றப் பாமாலை





என்னுயிர்ப் பெரியவாளே! உம்பதம் பணிந்து இன்று
உம்புகழ் பாடும் நானே குற்றமே சொல்ல வந்தேன்!

அற்புதன் அனந்தன் என்றும், நடமாடும் தெய்வம் என்றும்
பொற்பதம் போற்றும் நானே வழக்கொன்று தொடுக்க வந்தேன்!

தருமத்தின் மூர்த்தி ராமன் உருவமாய்ப் புவியில் வந்தீர்
அருமறை போற்றும் அன்பின் ஆட்சியே செய்து நின்றீர்

அன்னைகாமாக்ஷித் தாயின் உருவமாய் இங்கு வந்தீர்
நன்மையே அன்றி ஏதும் செய்யா நிர்குணமாய் நின்றீர்

ஆகையால் இங்கு நீரே நடுவராய் வந்திருந்து
பாகையும் வெல்லும் உங்கள் குரலாலே தீர்ப்பும் சொல்வீர்!

குற்றம் இங்கென்னவென்று என்னை நீர் கேட்கின்றீரோ?
குற்றம் ஒன்றிரண்டு அல்ல, அறுவகை குற்றம் சொல்வேன்

முதற் குற்றம் : பாத்திரம் அறியாமல் பிச்சை இடுதல் : 



“பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்பார் பெரியோர், இங்கு
சாத்திரம் அறியா என்மேல் கருணைகூர்ந்தளித்தீர் எல்லாம்

ஆத்திரம் காமம் சூது நிறைந்த என் நீச வாழ்வாம்
பாத்திரம் இதற்கு நீரும் கொடுக்காததெதுவும் உண்டோ?

முன்னோர்கள் சொன்ன வாக்கே, சாஸ்திரம் சொல்லும் வாக்கே
என்னாளும் கருதும் நீரே, இப்படிச் செய்யலாமோ?


இரண்டாம் குற்றம்: அழையாத வீட்டில் நுழைதல் :



“அழையாத வீட்டில் என்றும் நுழையாதே” என்பார் பெரியோர்
அழைத்தேனா உம்மை நானும்? ஐயா நீர் வருகவென்று?

மழையது பெய்யும்காலை பாலையும் நனைந்தாற்போல
பிழையாக எந்தன் நெஞ்சில் வந்துவிட்டீரோ நீரும்?

நான் உண்டு எந்தன் வேலை தானுண்டென்றிருந்த வாழ்வில்
நீர்வந்து புகுந்து இங்கு அமர்ந்தீரே! முறையோ ஐயா?


மூன்றாம் குற்றம் : சன்யாசி ஒரே இடத்தில் தங்குதல்

சன்யாசிக்கென்று இங்கு, ஒரு ஊரோ வீடோ இல்லை
சன்யாச தருமம் சொன்னீர்! நீரதைக் கைக்கொண்டீரோ?

அடிதொழுதுருகி நாடும் அடியாரின் மனதிலெல்லாம்
குடிபுகுந்தங்கேயே என்றும் தங்கியே கொலுவிருப்பீர்!

ஓரிடத்திலேயே என்றும் தங்காமல் சுற்றச் சொல்லும்
சீரிய தருமம் விட்டீர்! உமக்கிது தகுமோ ஐயா?


நான்காம் குற்றம் : தன்னைத் தானே ஸ்தோத்ரம் செய்து கொள்ளுதல்



தன்னையே பெரிதாய் எண்ணி தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளல்
என்னாளும் தவறே என்று பெரியோர்கள் சொல்லி வைத்தார்!

சிவனையே ஸ்தோத்ரம் செய்வீர்! அம்பாளை பூஜை செய்வீர்!
சிவனது ரூபம் என்றே சங்கரர் புகழும் சொல்வீர்!

சிவனது ரூபம் நீரே! சங்கர குருவும் நீரே!
சிவகாமி அன்னைத் தாயாய் வந்தவோர் துணையும் நீரே!

அத்தனை தெய்வமாயும் நீரே இங்கிருக்கும்போது,
நித்தம் நீர் செய்யும் பூஜை, உமக்கே நீர் செய்வதன்றோ?

சங்கரன் புகழை நீரே உலகெலாம் அறியச் சொன்னீர்!
சங்கர ஜெயந்தி தன்னில் அளவிலா மகிழ்ச்சி கண்டீர்!

சங்கரன் உருவாய் வந்து சங்கரன் புகழைச் சொன்ன
மங்கல வார்த்தையெல்லாம் உம்புகழேதான் அன்றோ!

சங்கரன் புகழாய் இங்கு நீர் சொன்ன வார்த்தையெல்லாம்
உங்களுக்கென்றே நீரே சொல்லிடும் புகழே அன்றோ!

வேண்டாம் தற்புகச்சியென்றே பெரியோரும் சொல்வார் ஆனால்
கண்டோம் இப்புகழ்ச்சியெல்லாம்! உமக்கிது சரியோ ஐயா?


ஐந்தாம் குற்றம்: பெரியவர்களை நமஸ்கரியாமை


வயதிலே பெரியார் தம்மை, மாண்பிலே சிறந்தோர் தம்மை
பயபக்தி பூர்வமாக நமஸ்கரி என்றார் பெரியோர்

பதின்மூன்று அகவை தாண்டி ஜகத்குரு என்று இந்தப்
பதியெலாம் போற்றப் பட்டம் ஏற்ற நாள் முதலே எந்தப்

பெரியோரை நமஸ்கரித்தீர்? எவரிடம் பணிந்து நின்றீர்?
அறியேனே ஐயா நானும்! என்னிடம் உண்மை சொல்வீர்!

குருவாக உமக்குப் பாடம் சொல்லவே வந்தோர் எல்லாம்
குருவாக உம்மைக் கண்டு உம்மையே வணங்கி நின்றார்!

ஞானத்தில் பெரியோரெல்லாம், மாண்பிலே சிறந்தோரெல்லாம்
ஞானியென்றால் அது நீரே! என்றுமைப் பணிந்து நின்றார்!

எவரைத்தான் நமஸ்கரிப்பீர்? யாரைத்தான் பணிந்து நிற்பீர்?
பவரோகம் தீர்க்கும் சீலன், உம்குறை பெரிதே ஐயா!


ஆறாம் குற்றம் : பக்த பராதீனனாக இருந்த போதும், அழைத்தவுடன் வரவில்லை




உருகியே அழுது நின்றால், உடன் வரும் தெய்வம் என்பார்
மருகியே தொழுது நின்றேன். உம்மையே நினைத்து நின்றேன்

மனதிலே நீரிருந்தும், தரிசனம் தந்தீரீல்லை
கனவிலேயானும் காட்சி கொடுத்தீரா அதுவும் இல்லை

நித்தமும் உம்மைப் பாடும் அன்பருக்கருளும் நீரே
சுத்தமாய் எனை மறந்தீர்! உமக்கிது சரியோ ஐயா?



தீர்ப்பு சொல்வீர்:




குற்றங்கள் ஆறு சொன்னேன். ஈசனாய், தாயும் தானாய்
சுற்றமாய் நின்ற உம்மை குற்றமே சொல்லி நின்றேன்

குற்றங்கள் சொன்ன போதும், சொன்னவை சரியே அன்றோ?
முற்றுமே உணர்ந்தோய் நீரே தீர்ப்பையும் சொல்வீர் ஐயா!

உம்மையே குற்றம் சொன்ன, குற்றமே உருவாய் வந்த
என்னையும் காத்து நீரே நற்கதி அருள்வீர் ஐயா!


பலஸ்ருதி:



வஞ்சமாய்ப் புகழ்ந்த வார்த்தை படித்த உம் அடியார் தம்மை
தஞ்சமாய் நீரே கொண்டு ஆண்டருள் புரிவீர் ஐயா!