Saturday, July 25, 2015

Periyava : kurrap paamaalai : பெரியவா : குற்றப் பாமாலை

25.07.2015

நாளையும் நாளை மறு நாளும் அனுஷக் கொண்டாட்டங்கள்! இந்த அனுஷ வைபவத்தின் பொழுது, பெரியவாளைப் பற்றி ஸ்மரிக்கும்போது, பெரியவாளிடம் ஏதும் குறை இருக்கிறதோ என்று யோசனை செய்யத்தோன்றியது. சர்வேஸ்வரனிடம் குறை இருக்குமா என்ன? 

"ம்ம்..இருக்கே" என்று தோன்றியது. ஆறு குற்றங்கள் மனதில் தோன்றின. அவையே இங்கே, பாமாலையாக, "குற்றப் பாமாலையாக" மலர்ந்திருக்கின்றன. 

பெரியவா கடாக்ஷம்.  



பெரியவா : குற்றப் பாமாலை





என்னுயிர்ப் பெரியவாளே! உம்பதம் பணிந்து இன்று
உம்புகழ் பாடும் நானே குற்றமே சொல்ல வந்தேன்!

அற்புதன் அனந்தன் என்றும், நடமாடும் தெய்வம் என்றும்
பொற்பதம் போற்றும் நானே வழக்கொன்று தொடுக்க வந்தேன்!

தருமத்தின் மூர்த்தி ராமன் உருவமாய்ப் புவியில் வந்தீர்
அருமறை போற்றும் அன்பின் ஆட்சியே செய்து நின்றீர்

அன்னைகாமாக்ஷித் தாயின் உருவமாய் இங்கு வந்தீர்
நன்மையே அன்றி ஏதும் செய்யா நிர்குணமாய் நின்றீர்

ஆகையால் இங்கு நீரே நடுவராய் வந்திருந்து
பாகையும் வெல்லும் உங்கள் குரலாலே தீர்ப்பும் சொல்வீர்!

குற்றம் இங்கென்னவென்று என்னை நீர் கேட்கின்றீரோ?
குற்றம் ஒன்றிரண்டு அல்ல, அறுவகை குற்றம் சொல்வேன்

முதற் குற்றம் : பாத்திரம் அறியாமல் பிச்சை இடுதல் : 



“பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்பார் பெரியோர், இங்கு
சாத்திரம் அறியா என்மேல் கருணைகூர்ந்தளித்தீர் எல்லாம்

ஆத்திரம் காமம் சூது நிறைந்த என் நீச வாழ்வாம்
பாத்திரம் இதற்கு நீரும் கொடுக்காததெதுவும் உண்டோ?

முன்னோர்கள் சொன்ன வாக்கே, சாஸ்திரம் சொல்லும் வாக்கே
என்னாளும் கருதும் நீரே, இப்படிச் செய்யலாமோ?


இரண்டாம் குற்றம்: அழையாத வீட்டில் நுழைதல் :



“அழையாத வீட்டில் என்றும் நுழையாதே” என்பார் பெரியோர்
அழைத்தேனா உம்மை நானும்? ஐயா நீர் வருகவென்று?

மழையது பெய்யும்காலை பாலையும் நனைந்தாற்போல
பிழையாக எந்தன் நெஞ்சில் வந்துவிட்டீரோ நீரும்?

நான் உண்டு எந்தன் வேலை தானுண்டென்றிருந்த வாழ்வில்
நீர்வந்து புகுந்து இங்கு அமர்ந்தீரே! முறையோ ஐயா?


மூன்றாம் குற்றம் : சன்யாசி ஒரே இடத்தில் தங்குதல்

சன்யாசிக்கென்று இங்கு, ஒரு ஊரோ வீடோ இல்லை
சன்யாச தருமம் சொன்னீர்! நீரதைக் கைக்கொண்டீரோ?

அடிதொழுதுருகி நாடும் அடியாரின் மனதிலெல்லாம்
குடிபுகுந்தங்கேயே என்றும் தங்கியே கொலுவிருப்பீர்!

ஓரிடத்திலேயே என்றும் தங்காமல் சுற்றச் சொல்லும்
சீரிய தருமம் விட்டீர்! உமக்கிது தகுமோ ஐயா?


நான்காம் குற்றம் : தன்னைத் தானே ஸ்தோத்ரம் செய்து கொள்ளுதல்



தன்னையே பெரிதாய் எண்ணி தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளல்
என்னாளும் தவறே என்று பெரியோர்கள் சொல்லி வைத்தார்!

சிவனையே ஸ்தோத்ரம் செய்வீர்! அம்பாளை பூஜை செய்வீர்!
சிவனது ரூபம் என்றே சங்கரர் புகழும் சொல்வீர்!

சிவனது ரூபம் நீரே! சங்கர குருவும் நீரே!
சிவகாமி அன்னைத் தாயாய் வந்தவோர் துணையும் நீரே!

அத்தனை தெய்வமாயும் நீரே இங்கிருக்கும்போது,
நித்தம் நீர் செய்யும் பூஜை, உமக்கே நீர் செய்வதன்றோ?

சங்கரன் புகழை நீரே உலகெலாம் அறியச் சொன்னீர்!
சங்கர ஜெயந்தி தன்னில் அளவிலா மகிழ்ச்சி கண்டீர்!

சங்கரன் உருவாய் வந்து சங்கரன் புகழைச் சொன்ன
மங்கல வார்த்தையெல்லாம் உம்புகழேதான் அன்றோ!

சங்கரன் புகழாய் இங்கு நீர் சொன்ன வார்த்தையெல்லாம்
உங்களுக்கென்றே நீரே சொல்லிடும் புகழே அன்றோ!

வேண்டாம் தற்புகச்சியென்றே பெரியோரும் சொல்வார் ஆனால்
கண்டோம் இப்புகழ்ச்சியெல்லாம்! உமக்கிது சரியோ ஐயா?


ஐந்தாம் குற்றம்: பெரியவர்களை நமஸ்கரியாமை


வயதிலே பெரியார் தம்மை, மாண்பிலே சிறந்தோர் தம்மை
பயபக்தி பூர்வமாக நமஸ்கரி என்றார் பெரியோர்

பதின்மூன்று அகவை தாண்டி ஜகத்குரு என்று இந்தப்
பதியெலாம் போற்றப் பட்டம் ஏற்ற நாள் முதலே எந்தப்

பெரியோரை நமஸ்கரித்தீர்? எவரிடம் பணிந்து நின்றீர்?
அறியேனே ஐயா நானும்! என்னிடம் உண்மை சொல்வீர்!

குருவாக உமக்குப் பாடம் சொல்லவே வந்தோர் எல்லாம்
குருவாக உம்மைக் கண்டு உம்மையே வணங்கி நின்றார்!

ஞானத்தில் பெரியோரெல்லாம், மாண்பிலே சிறந்தோரெல்லாம்
ஞானியென்றால் அது நீரே! என்றுமைப் பணிந்து நின்றார்!

எவரைத்தான் நமஸ்கரிப்பீர்? யாரைத்தான் பணிந்து நிற்பீர்?
பவரோகம் தீர்க்கும் சீலன், உம்குறை பெரிதே ஐயா!


ஆறாம் குற்றம் : பக்த பராதீனனாக இருந்த போதும், அழைத்தவுடன் வரவில்லை




உருகியே அழுது நின்றால், உடன் வரும் தெய்வம் என்பார்
மருகியே தொழுது நின்றேன். உம்மையே நினைத்து நின்றேன்

மனதிலே நீரிருந்தும், தரிசனம் தந்தீரீல்லை
கனவிலேயானும் காட்சி கொடுத்தீரா அதுவும் இல்லை

நித்தமும் உம்மைப் பாடும் அன்பருக்கருளும் நீரே
சுத்தமாய் எனை மறந்தீர்! உமக்கிது சரியோ ஐயா?



தீர்ப்பு சொல்வீர்:




குற்றங்கள் ஆறு சொன்னேன். ஈசனாய், தாயும் தானாய்
சுற்றமாய் நின்ற உம்மை குற்றமே சொல்லி நின்றேன்

குற்றங்கள் சொன்ன போதும், சொன்னவை சரியே அன்றோ?
முற்றுமே உணர்ந்தோய் நீரே தீர்ப்பையும் சொல்வீர் ஐயா!

உம்மையே குற்றம் சொன்ன, குற்றமே உருவாய் வந்த
என்னையும் காத்து நீரே நற்கதி அருள்வீர் ஐயா!


பலஸ்ருதி:



வஞ்சமாய்ப் புகழ்ந்த வார்த்தை படித்த உம் அடியார் தம்மை
தஞ்சமாய் நீரே கொண்டு ஆண்டருள் புரிவீர் ஐயா!

1 comment:


  1. என் மனதில் தோன்றிய சமாதானம் இது !

    குற்றம் சொன்னாலும் அதற்கு சமாதானம் சொன்னாலும் தவறாய் இருந்தால் திருத்தி பெரியவா நம்மை மன்னித்து தீர்ப்பை அருளுவார்.

    பெரியவா திருவடிகளே சரணம் –

    (பாடல்கள் சந்தம் – சிவவாக்கியர் பாடல்)

    இப்படிக்கு
    வேதாந்த கவியோகி நாகசுந்தரம்
    ருதன்பரா ஞான சபா
    புது டெல்லி

    முதற் குற்றம் : பாத்திரம் அறியாமல் பிச்சை இடுதல் :


    சமாதானம் 1 :

    அவ்யாஜ கருணையென்று ஆன்றோர்கள் சொல்லுவார்
    அவ்வாறு தானுமக்கு அருளையிங்கு செய்திட்டார்
    கவ்விசெல்லும் பூனைபோன்று கருணையினை கொண்டாரே
    எவ்விதம் இருந்தாலும் அருள் தவறவில்லையே


    இரண்டாம் குற்றம்: அழையாத வீட்டில் நுழைதல் :


    சமாதானம் 2 :

    வருக வருக என்றுமே மண்ணழைக்குதோ மழையை ?
    வருக வருக என்றுமே தேனழைக்குதோ வண்டை ?
    வருக வருக என்றுமே நாமழைக்க வேண்டுமோ ?
    இருக்கிறேன் அருளவென்று தானாக வருவாரே !


    மூன்றாம் குற்றம் : சன்யாசி ஒரே இடத்தில் தங்குதல்


    சமாதானம் 3 :

    உம்மனத்தில் இருப்பதனால் எவர்மனத்தில் இல்லையோ
    கம்மென்று இருந்திடாமல் கருத்தை மாற்றி விடுகிறோம்
    சிம்மாசனத்திலே சிறிதுநேரம் அமர வில்லையே !
    அங்கும் இங்கும் சுழல்வதே அவர் பிழைப்பாய் ஆச்சுதே !


    நான்காம் குற்றம் : தன்னைத் தானே ஸ்தோத்ரம் செய்து கொள்ளுதல்

    சமாதானம் 4 :


    கடலும் ஒன்று நதியும் ஒன்று நானிலதில் உள்ளது
    கடலின் இயல்பு வேறது நதியின் இயல்பு வேறது
    உடலைக்கொண்டு உலகத்தில் உயர் குருவாய் உள்ளதால்
    சுடலைமாடன் பூஜையை சூக்குமமாய் செய்தாரே



    ஐந்தாம் குற்றம்: பெரியவர்களை நமஸ்கரியாமை


    சமாதானம் 5 :

    மாலை கொண்டு வந்தக்கால் மேனியிலே தரித்திடார்
    மாலை தன்னை கரத்தில் கொண்டு சிரத்தினிலே தரிப்பரே
    வாலை முதல் மந்திரத்தை சொன்ன குரு சிரத்திலே
    காலை மடக்கி இருப்பதால் காத்தகுருவை வணங்குவார்

    ஆறாம் குற்றம் : பக்த பராதீனனாக இருந்த போதும், அழைத்தவுடன் வரவில்லை


    சமாதானம் 6 :

    நீயும் நானும் ஒன்று என்று அத்வைதம் சொன்னவர்
    வேய்ந்திடும் பாயிலே கயிராய் நம்முள் நிற்பவர்
    தாயை போன்று தயையை கொண்டு தாவியே வருபவர்
    மாயை வந்து மூடியதால் வருகை தெரிய வில்லையோ ?

    ReplyDelete